அன்பர்களே!
“கோவை குரல்” முதல் இதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ள உங்களை கொங்கு நாடு அன்புடன் அழைக்கிறது.
படத்தின் மீது சொடுக்குங்கள்!
ஜூலை 31, 2007 இல் 5:36 பிப ("கோவை குரல்" இதழ்)
ஜூலை 9, 2007 இல் 10:06 முப (posters)
ஜூலை 8, 2007 இல் 10:12 பிப (கோவை டீ ஸ்டால்)
– பிரசன்ன நந்தன்
“பணம் வருது, பணம் வருது, கத்திக்கொண்டே வந்தான் கிருஷ்ணன்.
“என்ரா கத்திக்கிட்டு வர” கோபத்துடன் கேட்டுவிட்டு “வந்து டீ சொல்லு, காலையிலுருந்து ஒண்ணும் வயித்துல போடல” என்றான் பழனி.
“ஆமா, டீயத்தான் தெனமும் குடிக்குறோமே, இனிமே வெளிநாட்டு ரேஞ்சுல குடிக்க போறோம், அத ஒரு பயலும் நம்ப மாட்டங்குறான்“.
“சலிச்சுக்காத மாப்பிள, விசயத்த சொல்லு“
“நம்ம கோயம்முத்தூரு சிங்கப்பூரு ஆவப்போவுதில்ல, நம்ம கார்ப்பரேசன் கமிசனர் நம்ம செலவுல வெளி நாடு போயிட்டு வந்து ரொம்ப வருத்தப்பட்டாராம். ஏந்தான் இந்த ஊரு இப்படி கேவலமா இருக்கின்னு. இப்போ பயங்கர சந்தோசமாம். துட்டுவந்து ஆவப்போவுது கோயம்முத்தூரு சிங்கப்பூரு“
“இப்படி பாடாதடா, கேக்குறதுக்கு ஆளிருந்தா எரும ஏரோப்பிளென் ஓட்டுதும்பியே“
“வரத்தான் போவுது, நீயல்லாம் வாயப் பொளந்து பாக்கதாம் போற“
“துட்டு எங்க ஆகாசத்துலருந்தா வருது?”
“எங்கிருந்து வந்தா உனக்கென்ன? கோடிக்கணக்கா கொட்டப்போவுது, நம்மூரு சிங்கப்பூரு ஆவப்போவுது அவ்வளவுதான”
ஏண்டா, கொடுத்தவந் திருப்பி கேக்க மாட்டானா
டீ மாஸ்டர் காளி திரும்பிப் பார்த்தார்.“ஏலேய், திருப்பித்தராம இருந்தா கோவணங்கூட மிஞ்சாதுலே. வாங்கின காச மட்டுமில்ல, வட்டிக்கணக்க பாத்தா குடிச்ச டீயக் கக்கிறுவே“
கையில் சொம்புடன் டீ வாங்க வந்த அஞ்சாங்கிளாஸ் அரை டிரவுசர் ஒரு கையால் கால்சட்டையை நழுவி விடாமல் பிடித்துக்கொண்டே கவலையுடன் கேட்டது “அண்ணே, திருப்பி தர தெம்பிருக்கானே நம்ப காப்பரேசன் கமிசனருக்கு“
அஞ்சாங்கிளாஸ் நீயே கேக்குற, கேக்க வேண்டியவங்க கேக்கமாட்டங்குறாங்களே, வாயப்பொளந்துக்கிட்டு தனக்கெதோ பெரிசா வரப்போவுதுன்னு வேறெதையுமே பேச மாட்டக்கிறாங்களே,
யாரு பேசுனா என்ன பேசாட்டி என்ன, திருப்பிக் கொடுக்கப் போறது நீயும் நானும் தான. கமிசனர் என்ன கைக்காசயா நீட்டப் போறாரு. கடத்தேங்காய எடுத்து வழியில ஒடைக்கிறதுக்கு நோக்காடா?
அவரு மட்டுமில்லடா மாப்பிள, ஒரு பெரிய படையே இருக்குது. தேங்கா உடைக்கவா இடமில்ல அவங்களுக்கெல்லாம்?
அவனவன் மண்டய காப்பாத்திக்க வீட்டுக்குள்ளகூட ஹெல்மட் போட்டுக்க வேண்டியதுதான்.
தலையே சுத்துது, என்னண்ணே நடக்குது கோயம்புத்தூருல?
(தொடரும்)
ஜூலை 8, 2007 இல் 2:53 பிப (அட்டைப் படங்கள்)
ஜூலை 5, 2007 இல் 1:24 முப ("கோவை குரல்" இதழ்)
இனி நம் கோவை மாநகரம் சந்திக்கப் போவது சுதந்திரத்தையா? சர்வ நாசத்தையா?
ஜூலை 4 – அமெரிக்க நாட்டின் சுதந்திர தினம்.
ஆகஸ்டு 6 – 1945 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்க இராணுவம் அணு குண்டை வீசி சுமார் ஒரு இலட்சத்து நாற்பதினாயிரம் மனிதர்களையும், எண்ணிலடங்கா உயிரினங்களையும் விநாடிகளில் சாம்பலாக்கி, தற்செயலாகத் தப்பிப் பிழைத்த பிற மக்களுக்கும் பல்வேறு புற்று நோய்களைக் கொடையாகக் கொடுத்த பேய் நாள் அது.
ஈராக் நாட்டின் மீது பல்லாயிரம் டன் பயங்கர வெடி குண்டுகளை வீசித் தாக்கிய போர்க் கப்பலில் ஒன்றான யு.எஸ்.எஸ்.நிமிட்ஸ் சென்னைத் துறைமுகத்தில் அமெரிக்காவின் சுதந்திர தினத்தன்று நங்கூரம் பாய்ச்சி நிற்கிறது….
ஈராக்கில் போரிட்டுக் களைத்துப் போன அதன் கூலிப் படையினருக்கு உல்லாசமாக அவர்தம் நாட்டின் சுதந்திர நாளைக் “கொண்டாடிட” சென்னை நகரின் நட்சத்திர விடுதிகளில் விலைக்காகத் தம் உடல்களை விற்கத் தயாராயிருக்கும் நம் நாட்டு மகளிர்களைத் தனியார் “ஒப்பந்தக்காரக்” கம்பெனிகள் ஏற்பாடு செய்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
நிற்க.
இதற்கும் கோவை மாநகருக்கும் என்ன சம்பந்தம்?
பணம் மற்றும் அதிகாரத்தைத் தவிர வேறு எதுவும் அவசியம் இல்லை என்று கருதும் அமெரிக்க நாட்டரசின் சுதந்திர தினத்தன்றுதான் கோவை மாநகராட்சியானது நகரத்தின் குப்பைகளை அகற்றும் திட்டத்தில் பங்கேற்பதற்காக சர்வதேச அளவில் “குப்பைகளை அள்ளி” பெரும் லாபம் சம்பாதித்து வரும் சர்வதேச தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடும் “சர்வதேச அளவில் ஒப்பந்தம் கோரும்” அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
இனி வரும் வருடங்களில் 3186 கோடி ரூபாய்க்கான திட்டங்களை நகரில் சர்வதேச தனியார் நிறுவனங்களைக் கொண்டு நடைமுறைப் படுத்தப் போவதாக இது வரை வெறுமனே வாயாடிக் கொண்டிருந்த மாநகராட்சி நிர்வாகம் இந்தத் திட்டங்களின் முதல் படியான 96.51 கோடி ரூபாய் மதிப்புள்ள “நகரின் குப்பைகளை அகற்றும்” திட்டத்தை அமெரிக்க நாட்டின் நிமிட்ஸ் “அடியாள்” கப்பலின் கூலிகள் சென்னையின் ஐந்து நட்சத்திர விடுதிகளில் தாம் ஈராக் நாட்டில் கொள்ளையடித்த டாலர்களை நம் இனப் பெண்களிடம் விட்டெறிந்து மிருக போதையில் ஆடித் திளைத்துக் கொண்டிருக்கும் அந்தப் “புனித” வேளை பார்த்துத்தான் வெளியிட்டிருக்கிறது.
இவ்வாறு வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் ஒப்பந்தம் கோரப் போகும் “குப்பை” முதலாளிகளின் விண்ணப்பங்களை மாநகராட்சி என்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாம்?
ஆகஸ்டு 6 ஆம் தேதியன்று!
அதாவது ஹிரோஷிமா நகரில் அமெரிக்க அரசு பேயாட்டம் இட்டு இந்தப் பூவுலகிடம் இப்படியும் ஒரு பயங்கரன் இருப்பதாக அறிவித்துக் கொண்ட அதே நாளில்!!
இந்த நாட்களை மாநகராட்சி தற்செயலாகத்தான் தேர்ந்தெடுத்ததா?
சர்வதேச அரசியலிலும், மானுட வரலாற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்த நாட்களை மனதில் வைத்து அதற்கேற்ப மாநகராட்சியின் பணிகளைத் திட்டமிடும் அளவிற்கு மாநகராட்சியின் அதிகாரிகள் இருப்பார்களா என்ற அப்பாவிக் கேள்வி நம்முள் எழக் கூடும்.
கலைஞர், தளபதி, புரட்சித் தலைவி, புரட்சித் தலைவர், அண்ணா, பெரியார் என்றே ஒரு கால் நூற்றாண்டை ஓட்டி விட்ட நம் மாநகராட்சியால் இப்படிப்பட்ட “விசித்திரமான” ஒரு முடிவை எடுத்திருக்க முடியுமா என்ன?
“இதைத் தவிர அதனால் வேறு என்ன செய்திருக்க முடியும்? என்பதுதான் இதற்கான பதில். ஏனென்றால் “ஜவஹர்லால் நேரு தேசிய நகரப் புணரமைப்புத் திட்டம்” என்ற இந்தத் திட்டத்தைப் பொருத்த வரையில் நம் மாநகராட்சியானது சாதாரண மனிதர்களின் “நேரடிப் புலன்களுக்குப் புலப்படாத பல்வேறு பயங்கர சக்திகளின்” கைப்பாவையாக இருக்கிறதேயொழிய வேறில்லை என்பதுதான் உண்மை.
கோவை மாநகராட்சியை விலங்கிட்டு சிறைப் பிடிக்கத் துடிக்கும் சர்வதேச “வட்டிக்” கும்பல்கள்:
ஜூலை 4 ஆம் தேதி மாநகராட்சியால் வெளியிடப்பட்ட “குப்பை அள்ளும்” ஒப்பந்தத் தேர்விற்கான அறிக்கையை மாநகராட்சிக்காகத் தயாரித்துக் கொடுத்தது யார்? திட்டதிற்கான சர்வதேச ஒப்பந்தத்தைக் கோருவதற்கான தேதிகளைக் குறித்துக் கொடுத்தது யார்?
புது தில்லியைத் தலைமயிடமாகக் கொண்டு 1987 ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வரும் IL&FS என்ற வட்டிக் கம்பெனியின் ஒரு அங்கமான Infrastructure Development Corporation Limited என்ற நிறுவனமே இந்த அறிக்கையை மாநகராட்சிக்குத் தயாரித்துக் கொடுத்திருக்கிறது. அறிக்கையின் அனைத்து கருத்துக்களும் அதன் மூளையில் இருந்து உதித்தவையே. சர்வதேச ஒப்பந்ததிற்கான தேதிகளையும் அதுவே முடிவு செய்திருக்க வேண்டும்.
பொதுச் சொத்துக்களைத் தனியார்மயமாக்குவதில் தன்னைப் போல் அனுபவம் மிக்க நிறுவனம் இந்தியாவிலேயே இல்லை என்று வெளிப்படையாகவே பெருமிதம் கொள்ளும் நிறுவனம்தான் அது. 1987 ஆம் ஆண்டில் அந்த நிறுவனம் உருவாக்கப் பட்டதற்கான அடிப்படை நோக்கமே அரசு சொத்துக்களைத் தனியார்மயமாக்குவதை ஊக்குவிப்பதற்குத்தான்!
இப்படிப்பட்ட நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அறிக்கை கோவை மாநகரை எங்கு இட்டுச் செல்லும்?
IL&FS நிறுவனமானது முதலில் ‘சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா’, ‘யுனியன் டிரஸ்ட் ஆப் இந்தியா’, (வீடு கட்டக் கடன் கொடுக்கும் நிதி நிறுவனமான) HDFC ஆகியோரால் தொடங்கப்பட்டது. பின்னர் உலக வங்கி, (19 ஆம் நூற்றாண்டில் சீனாவில் ஆங்கிலேயர்களின் வியாபாரத்தை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டு, இன்று உலகின் மிகப் பெரிய வங்கியாக இருக்கும்) ஹாங்காங் & ஷாங்காய் பேங்கிங் கார்ப்பரேஷன் (HSBC), ஜப்பானில் கார்களை வாங்க வட்டிக்குக் கொடுக்கும் நிறுவனமான ஓரிக்ஸ் கார்ப்பரேஷன், (அபு தாபி நாட்டின் மன்னருக்கு சொந்தமான, உலகின் முன்னணி வட்டி நிறுவனங்களில் ஒன்றான) அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி, பிரான்ஸ் நாட்டின் “க்ரெடிட் கமர்ஷியல் டி பிரான்ஸ்” மற்றும் எல்.ஐ.சி ஆகிய நிறுவனங்களை தன் அங்கத்தினர்களாக ஆக்கிக் கொண்டது.
இன்று இந்த நிறுவனத்தில் எல்.ஐ.சி. சுமார் 27% பங்கையும், ஜப்பானின் ஓரிக்ஸ் நிறுவனம் சுமார் 24% பங்கையும், HDFC சுமார் 13% பங்கையும், அபுதாபி நிறுவனம் சுமார் 13%ஐயும், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா சுமார் 9%ஐயும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 7.68% பங்கையும், நிறுவனத்தின் அதிகாரிகள் சுமார் 6.5% பங்கையும் வைத்திருக்கிறார்கள்.
அதாவது இந்த நிறுவனத்தில் தனியாரின் முதலீடு சுமார் 57% ஆகவும், அரசு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் முதலீடு மீதமுள்ள 43% ஆகவும் உள்ளது. தனியாரின் முதலீட்டில் சுமார் 40% அந்நிய நாட்டு நிறுவனங்களின் முதலீடாக இருக்கின்றது.
இந்தத் தனியார் வட்டி நிறுவனங்களே கோவை நகர மேம்பாட்டிற்கான திட்டத்தை தயாரித்துக் கொடுத்தது மட்டுமல்லாமல், இந்தத் திட்டங்கள் அனைத்திலும் தனியார் முதலாளிகளை உள்ளே நுழைப்பது மூலமாக கோவை நகரின் பொது சொத்துகளையும், இதுவரை மாநகராட்சிக்கு மக்கள் கட்டி வந்த வரிப் பணத்தையும், மத்திய அரசு மாண்யமாக வழங்க முன் வந்திருக்கும் பணத்தையும் இந்த முதலாளிகளுக்குத் தாரை வார்க்கும் யோசனையையும் கோவை மாநகராட்சிக்கு வழங்கியிருக்கின்றன.
இந்தத் திட்டத்தையும், யோசனைகளையும் எவ்விதக் கேள்வியும் இன்றி கோவை மாநகராட்சி ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் வட்டி மற்றும் லாபம் என்ற வார்த்தகளைத் தவிர வேறு எதையும் விரும்ப விரும்பாத அற்ப ஜீவிகளின் கைப்பாவையாக மாறி செயலாற்ற எத்தனித்திருப்பதுதான் கோவை மக்களின் வரலாற்று சோகம்.
10 லட்சத்துக்கும் கூடுதலான மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவின் 63 நகரங்களை பல்லாயிரம் கோடி ரூபாய் மூலதனம் கொண்டு மாற்றியமைக்கலாம் என்பது நம் அரசின் மூளையில் உதித்த திட்டமே அல்ல.
1993 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் இயங்கத் தொடங்கிய அமெரிக்க அரசின் நிறுவனமான United States Agency for International Development(USAID) -இன் மூளயில் உதித்த திட்டமே அது. Financial Institutions Reform and Expansion – Debt (FIRE-D) என்ற திட்டமே இன்று மத்திய அரசின் மூலமாகவும், மநில அரசு மூலமாகவும், IL&FS போன்ற வட்டி நிறுவனங்கள் மூலமாகவும் கோவை போன்ற நகரங்களின் மீது “ஜவஹர் நகர மேம்பாட்டுத் திட்டம்” என்ற பெயரில் கோடை இடியாய் இறங்கியிருக்கிறது.
பிறவி ஊனம் கொண்ட அமெரிக்கப் பேராசை மனத்தில் இருந்து “நேரு மாமா” போர்வையைப் போர்த்திப் புறப்பட்டிருக்கும் இந்த இடியைக் கோவை மக்களாலும், இந்தியாவின் பிற நகர மக்களாலும் தாங்கிட, சமாளித்திட முடியுமா?
அல்லது இம் மக்கள் யாவரும் ஹிரோஷிமா நகரில் லட்சக்கணக்கானோர் அமெரிக்க அணு குண்டுக்கு விநாடி நேரத்தில் இரையானது போல, பற்றியெரியும் அமெரிக்கக் “காய சண்டிகை” வட்டிப் பசிக்கு இரையாகித்தான் போவார்களா என்ன?
இதை உணர்த்தத்தான் USAID நிறுவனத்தால் வளர்க்கப் பட்டு, இன்று ஜப்பானியரைத் தன் முதலாளியாகக் கொண்டிருக்கும் IL&FS நிறுவனம் இந்தத் திட்டத்தின் சர்வதேச ஒப்பந்தத்திற்கான தேதிகளாக ஜூலை 4-ஐயும், ஆகஸ்டு 6-ஐயும் தேர்வு செய்ததா என்ன?
ஜூலை 2, 2007 இல் 6:36 பிப ("கோவை குரல்" இதழ்)