இரண்டாம் இதழ் இதோ உங்கள் பார்வைக்கு…

கோவைக் குரல் “இரண்டாம் இதழ்” இதோ உங்கள் கையில்!

சொடுக்குங்கள் படதித்தின் மேலே!

கோவைக் குரல் இரண்டாம் இதழ்

 

மத்திய நகர மேம்பாட்டு அமைச்சகத்துடன் கோவை மாநகராட்ச ஜவகர் திட்டத்திற்காக செய்து கொண்ட ஒப்பந்தம் இதோ உங்கள் பார்வைக்கு!

Coimbatore Corporation Memorandum of Agreement with MoUD

“வாங்கின கடன கட்டாத பரம்பரன்னு நம்ம மேல ஒரு பழி வந்திரக்கூடாது பாருங்க”

கோவை மாநகர மக்கள் கண்காணிப்புக் குழு

 

வெளிநாடு போயிட்டு வந்த நம்ம ஊரு சினிமாக்காரங்களக் கேட்டீங்கன்னா பதில் அனேகமா அவங்க பாத்த இடத்தோட சுத்தத்த பத்தியோ, ரொம்ம்ம்ப உயரமா இருந்த கட்டிடத்தப் பத்தியோ, நீளமா வழு வழுன்னு இருந்த ரோட்டப் பத்தியோ, அப்புறம் மறக்காம அவங்க செலவழிச்சிட்டு வந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பத்தியோ சொல்லுவாங்க. நாமளும் சோத்த மறந்து படிச்சிருக்கிறோம்.

 

நம்ம ஊருல அப்படி ஒரு காலம் எப்ப வருமுன்னு நெறய பேர் ஏங்கியும் இருப்போம். கடைசி கடைசியா கோயம்புத்தூருக்கு அப்படி ஒரு வாய்ப்பு ஒண்ணு வந்திருக்கு. அட நம்புங்க, உண்மையிலேயே அப்படி ஒண்ணு வந்திருச்சிங்க.

 

இந்தியாவில எத்தனையோ ஊரிருக்க கோயம்புத்தூருக்கு மட்டும் அப்படி என்ன தனி மவுசு. அதெல்லாம்  ஒண்ணுமில்லீங்க. இதே மவுசு தமிழ்நாட்டுல சென்னைக்கும் மதுரைக்கும் கூட இருக்குன்னு திட்டம் சொல்லுது. மக்கள் தொகை 10 லட்சத்துக்கு மேல இருந்தா நகர மேம்பாட்டுக்கு மத்திய அரசு பாதிக் காசக் கொடுக்குது. மாநில அரசு 20% கொடுக்கனும். நம்ம கார்ப்பரேசன் 30%  செலவுசெய்யனும். கார்ப்பரேசனுக்கு யார் கொடுப்பா? நாமதான் கொடுக்கனும். வெறும் 30% தானே, கொடுத்துறலாம்னு தோணும். எதுக்கும் முழுசாப் படிச்சிடுங்க.

 

ஜவகர்லால் நேரு தேசிய நகரப் புனரமைப்புத் திட்டம் அப்படின்னு பேரு வச்சிக்கிட்டு வந்திருக்கிற திட்டத்துல கோயம்புத்தூருக்கான திட்ட மதிப்பு ஏறக்குறைய 3224 கோடி. இவ்வளவு பணத்த மத்திய அரசு எங்கிருந்து கொடுக்குது? மாநில அரசு திடீருனு எங்கிருந்து கொடுக்கும்? 30% மாநகராட்சிக்கிட்ட ஏற்கனவே இருக்குதா, இல்லன்னா எங்கிருந்து வரப்போவுது?

 

இதுக்கெல்லாம் நாம ரொம்ப மண்டய உடைச்சுக்க வேண்டியதில்ல. உலக வங்கின்னு ஒண்ணு இருக்குது. அது ஒண்ணும் தனியா இல்ல. கூட அதனோட குட்டிங்க, சொந்தங்க, மாமன் மச்சான்னு இருக்கிறாங்க. அதுல நெறய பேரு அமேரிக்காவிலதான் இருக்கிறாங்க. உலகம் முழுக்க அரண்மனைங்க (கம்பெனின்னுதான் அவங்க சொல்லுவாங்க). காலை ஹாங்காங்கில் காப்பி, மாலை நியூயார்க்கில் காபரே அப்படிங்கிற மாதிரி ஒரு வசதி. ரொம்ப மயக்கமா இருக்குதா, இது சும்மா ஒரு சேம்பிளுக்குதான்.

 

கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி கந்து வட்டி, மீட்டர் வட்டி வசூலிக்கிற  மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியநம்மாளுங்க சிலபேர குண்டர் சட்டத்துல உள்ள போட்டதா படிச்சிருப்போம். இதென்ன இப்படி இவ்வளவு மரியாதையின்னு பாக்குறீங்களா? நம்ம நகருக்காக கடன் கொடுக்கப்போற பன்னாட்டு, மேல்நாட்டு, வெளிநாட்டு கம்பெனிகள மட்டும் ரொம்ப மரியாதயோட அழைக்கிறப்போ விசயம் தெரிஞ்ச நம்மாளுங்க சிரிச்சிரக்கூடாது பாருங்க.  அதுலயும் சின்னச்சின்னதா குறஞ்சது ரெண்டு வித்தியாசங்க இருக்கத்தான் செய்யுது. நம்மூரு மீட்டர் வட்டிக்காரங்க அநியாயமா சம்பாரிச்சத வேற நாட்டுக்கு கொண்டு போகல. அப்புறம் நம்மலதேடி வந்த தெய்வங்கிறரேஞ்சில நாம அவங்களக் கும்பிட்டுகிட்டு நிக்கல. இருந்தாலும் எல்லோரையும் மரியாதயாவே அழைச்சிருவோம்.

 

CDP (City Development Plan) அப்படின்னு ஒண்ணு இருக்குது. நகர மேம்பாட்டுக்கான திட்ட அறிக்கை. இந்த நகர்ல என்னவெல்லாம் குறையிருக்குது, எதெல்லாம் வேணும், அதுக்கு தோராயமா எவ்வளவு செலவாகும் அப்படிங்கிற மாதிரி ஒரு முதல் அறிக்கை. Wilbur Smith Associates அப்படின்னு ஒரு அமெரிக்க கம்பெனி நம்ம மேல ரொம்பப் பரிதாபப் பட்டு ஒரு சில கோடி ரூபாய் மட்டும் நம்ம கார்ப்பரேசன்கிட்ட வாங்கிக்கிட்டு 84 நாள்ல டைப் அடிச்சிக் கொடுத்தது. கோவைக்கு வில்பர் ஸ்மித் பழைய ஆளுங்கதான். ரோடு போடுரேன்னு உள்ள வந்தவங்க. கோயம்புத்தூருக்கான 3224 கோடியில பெரும்பகுதியான 70% அதாவது ஏறக்குறைய 2250 கோடி ரூபாய் ரோட்டுக்கும் பாலத்துக்கும் ஒதுக்கினதுக்கும் வில்பர் ஸ்மித் கம்பெனிக்கும்  ஒரு சம்பந்தமும் இல்லேன்னு நாம நம்பித்தான் ஆகனும். அப்படித்தான் கார்ப்பரேசன்ல சொல்றாங்க.

 

சரி, கோயம்புத்தூருல அப்படி என்னதான் மேம்பாடு வேல நடக்கப்போவுதுன்னு பாத்தா முக்கியமானது சிலது இருக்கு. பாலங்களும் சாலைகளும் 70% தின்னது போக மீதி ரூபாயில தண்ணீர் விநியோகம், சாக்கடை, குப்பை அகற்றுவது, குடிசை மாற்று இதுமாதிரி முன்னேற்றமான வேலைகள். இதிலென்ன தப்பு. பெரிசா ஒண்ணுமில்லன்னு இப்போதைக்கு நினைச்சிக்கலாம். அதுக்கு முன்னாடி அத எப்படி செய்யப்போறாங்க அப்படிங்கிறதுல உள்ள பிரச்சினை என்னென்னு தெரிஞ்சிக்கலாம்.

 

முதல் பிரச்சினையும், கடைசிப் பிரச்சினையும் வாங்கப்போற கடன்லதான். அப்ப இடையில ஒரு பிரச்சினையும் இல்லையா? இருக்குது. திட்டங்கள் பலது அரைகுற, நேரடியா மக்கள் நலனுக்கானதுன்னா போதுமான ஒதுக்கீடு இல்ல. ஆனாலும் அதெல்லாம் கடனுக்கு அப்புறந்தான் வருது. மாநகராட்சி தயார் செய்ய வேண்டிய 30%, ஏறக்குறைய 900 கோடி ரூபாய்க்கு என்ன செய்யிறது. மாநகர ஒரு வருட பட்ஜெட் 150 கோடிக்கு கிட்டதான், அதிலயும் மிச்சம் அப்படின்னு ஒண்ணும் நிக்காது அப்படிங்கிறப்போ 900 கோடி எவ்வளவு பெரிய தொகைங்கிறதப் புரிஞ்சிக்கலாம். அதனாலதான் நம்ம கார்ப்பரேசன் சொல்லுது, திட்டத்த பேசாம தனியாருகிட்ட கொடுத்துறலாம். அவங்க காசப் போட்டு செஞ்சிக்கிடட்டும். வர்ர லாபத்துல அத எடுத்துக்கிடட்டும், லாபம் வரலன்னா அந்தக்காச மக்கள் கிட்ட வசூல் பண்ணிக் கொடுத்துறலாம். எப்படியோ, வரப்போறக் கம்பெனிக்கு லாபத்தத் தவிர வெறொண்ணுமே வராது அப்படின்னு சொல்லித்தான் கூட்டி வரப் போறாங்க.

 

நகரத்த தனியாருக்குக் கொடுக்கிறதுல அப்படி என்னதான் பிரச்சினை. நாமெல்லாம் நிறைய பேர் படிக்கிறது தனியார் ஸ்கூல், காலேஜ், வேலைக்கு போறது, போவப்போறது தனியார் கம்பெனி. ஒண்ணுந் தப்பில்லங்கிற மாதிரி தோணுதா? அப்படி நல்ல இருந்தா நல்லதுதான். ஆனா அதுக்கு முன்னாடி ஆத்துப்பாலம் அப்படின்னு கோயம்புத்தூருல ஒரு இடம் இருக்குது. அதிலருந்து ஆரம்பிச்சா பளிச்சின்னு புரிஞ்சிரும்.

 

L & T அப்படின்னு நம்மூரு கம்பெனிதான். அர ஆத்துப்பாலத்த கட்ட செலவானது ஒரே ஒரு முறை 3 கோடி ரூபாய். போன வருசத்துல டிக்கட் போட்டதுல லாபம் மட்டும் சுமார் 6 கோடி. 1998லிருந்து 2018 வரைக்கும் வசூல் பண்ணிக்கலாம். அதுலயும் வருசா வருசம் டிக்கட் காசு கூடிக்கிட்டே போவுது. சின்னதா ஒரு பெருக்கல் கணக்கு போட்டுப் பாத்து வாய மூடினதுக்கப்புறம் ஒரு கேள்வி வரும். அது அநேகமா என்னவா இருக்கும்னா, கார்ப்பரேசன் ஒரு 3 கோடி ரூபாய் செலவு பண்ணியிருந்தா வருசா வருசம் வர்ர லாபத்த நம்ம நகர முன்னேற்றத்துக்கு பயன் படுத்தியிருக்கலாமே? அப்படிங்கிறதுதான.

 

சரி, இப்ப வந்திருக்கிற ஜவகர் திட்டத்துல குப்பை திட்டத்த எடுத்துக்கலாம். அதுல மட்டும் என்ன. இதே மாதிரி ஒரு கணக்கு வரும். குப்பையால் கோடீசுவரர்கள் மேலும் கோடீசுவரர்களான கதைதான் இப்போ ரொம்பப் பிரபலம். குப்பையை உரமா மாத்தி கோடிக்கணக்கில லாபம் பாக்கப் போவுது ஒரு தனியார் கம்பெனி. அத நாம செய்ய முடியாதா? முடியும். முதலுக்கு எங்கப்போறது அப்படின்னு ஒரு கேள்வி வரும். அந்தக் கம்பெனி மட்டும் கைக்காசயா போடப்போவுது. அதுவும் ஏதோ ஒரு இடத்துல கடன் தான் வாங்கப்போவுது. அதுக்கு கடன் கொடுக்குறதுக்கு மேலே சொன்ன குட்டிங்க, சொந்தங்க, மாமன் மச்சான்னு இருக்குறாங்க. அவங்களத் தவிர வேற நெறய வழி நம்ம அரசாங்கத்திலேயே இருக்குது. அந்த வழியில கார்ப்பரேசனுக்கு கடன் கிடைக்கும்.

 

குப்பைய விடுங்க. தண்ணிய எடுத்துக்கலாம். பில்லூர் 2ம் திட்டம்னு ஒண்ணு. பில்லூர் 1ம் திட்டத்தோட முக்கால்வாசி வசதிகள பயன்படுத்திக்கிட்டு வரப்போவுது. 1ம் திட்டத்த ரொம்பக் குறைஞ்ச செலவுல செயல்படுத்துனது நம்ம தமிழ்நாடு TWAD போர்டு. 2ம் திட்டம் ஜவகர்லால் நேரு பேருல வரதினால தனியாருக்குத்தான் கொடுத்தாகனும், உலகளாவிய டெண்டர்தான் விட்டாகனும் அப்படின்னு கார்ப்பரேசன் சொல்லுது. சரி பரவாயில்ல அப்படின்னு தோணுதா? ஒப்பந்தம் எப்படி போடுவாங்கன்னு தெரியுமா? இன்னும் 30 வருசத்துக்கு அந்தக் கம்பெனிதான் அந்தத் தண்ணிக்கு ஓனர். ஒரு வேளை மக்கள் தொகை பெருக்கத்தாலயோ, அல்லது சிறுவாணி ஏமாத்திட்டதாலயோ கூடக் கொஞ்சம்  தண்ணி கேட்டாலும் கொடுக்கனுமா வேண்டாமான்னு அந்தக் கம்பெனிதான் முடிவு பண்ணும். மீதமாகிற தண்ணிய என்னவேணா செய்துக்கலாம். கோர்ட்டுக்கு போனாலும் கேசு ஜெயிக்காது. கேக்கவே நல்லாயிருக்கில்ல. திருப்பூருல இந்தக் கூத்துதான் நடக்குது. கோவையில இன்னும் திட்டமே வரல, ஆனா வீடுகளுக்கான தண்ணிக்காச நம்ம மாநகராட்சி திடீருனு உயர்த்தினது எதுக்குனு தெரியுதா?

 

பாதாளச்சாக்கடைத் திட்டம் ஒண்ணு வருது. DPR (Detailed Project Report) – விரிவான திட்ட அறிக்கைய ஒரு கம்பெனி தயாரிச்சிக் கொடுத்துருக்கு. மொத்தம் 90 பக்கம் தான். அதுக்கு ஆலோசனைக் கட்டணம் ரொம்ப இல்ல. வெறும் 136 லட்சம் தான். அதாவது ஒரு பக்கத்துக்கு டைப் பண்ண சுமார் ஒண்ணர லட்சம். ஒரு வேள ரொம்பக் கஷ்டப்பட்டு தயாரிச்சிருப்பாங்களோ அப்படின்னு பாத்தா ஏமாந்தே போவீங்க. ஈயடிச்சான் காப்பி அடிக்கிறது நமக்கு ஒண்ணும் புதுசு இல்ல. ஆனா அதுக்கு 136 லட்சம் யார்தான் தருவா? சரி, விவரம் சரியா இருந்தா நல்லது தான. அதுவும் கிடையாது. நகரத்துல எந்த இடம் உயரம், எந்தப் பக்கம் பள்ளம், எப்படி பாதாளச் சாக்கடை போனா சரியா இருக்கும் அப்படின்னு ஒரு படம் கூட கிடையாது. இதுகூட இல்லாம ஆராய்ச்சி பண்ணதுக்கு 136 லட்சம். இதத்தான நம்மூருல சூப்பருன்னு சொல்வோம்.

 

பாதாளச்சாக்கடைக்குத்தான் இந்த மரியாதையா அப்படின்னு கேட்டீங்கன்னா, CDP தெளிவா சொல்லிருது. திட்டத் தொகையில 5% ஆலோசனைக் கட்டணம் கொடுத்தே ஆவனும். கோயம்புத்தூருலருந்து மட்டும் ஏறக்குறைய 150 கோடி. சிவாஜி படத்தில பறந்திச்சி பாத்தீங்களா அது மாதிரி  கோயம்புத்தூர விட்டு பறந்திருச்சு அல்லது பறக்கப் போவுது. இந்த சின்னத் தொகையான 150 கோடி எந்தெந்த நாட்டுக்கு போவப் போகுதுன்னு கண்டுபிடிக்க ரொம்பக் கஷ்டப்பட வேணாம். அந்தக் கம்பெனிங்க உண்மையிலேயே யாருன்னு இண்டெர்நெட்ல பாத்தாப் போதும். பளிச்சினு கண்டுபிடிச்சிறலாம்.

 

அது எப்படிங்க, கேணத்தனமா இருக்குது, நம்மதலங்க இதத் தடுத்து நம்மள காப்பாத்த மாட்டாங்களா? இப்படி அவசரப்பட்டு கேள்வி கேக்கனுன்னு தோணிச்சின்னா, அவங்கள கூட்டிக்கிட்டு வந்தது யாரு? இப்ப கோவையில இந்தத் திட்டத்த மேற்பார்வை பாக்கிற கம்பெனி I.L.& F.S. யாரு? ஈராக்குல குண்டு போட்டு அழிச்சிட்டு திரும்பக் கட்டுறேங்கிறப் பேருல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு காண்ட்ராக்ட் எடுத்த அமெரிக்க நிறுவனமான பெக்டெல்லுக்கு திருப்பூருலயும் கோயம்புத்தூருலயும் என்ன வேல? இத மாதிரி ஆளுங்களுக்கும் நம்மதலங்களுக்கும் எப்படியான கொடுக்கல் வாங்கல் உறவு? கார்ப்பரேசன் ஆபீசுல இப்பல்லாம் அதிகம் வந்து போறவங்க எந்த நாட்டுக்காரங்க? எந்த நாட்டுக் கம்பெனியோட ஏஜெண்டுங்க? குறைஞ்ச பட்சம் இந்த விவரமாவது தெரியனும்.

 

ஆலோசனைக் கட்டணம் 150 கோடி மட்டுமில்ல, இன்னும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் காண்ட்ராக்ட் எடுத்த, எடுக்கப்போற வெளிநாட்டுக்கார கம்பெனிங்களோட  நாட்டுக்கு  பறக்கப் போவுது. வேலய நம்மூரு சின்னக் கம்பெனிங்க கொஞ்சத் தொகைக்கு முடிச்சிக் கொடுத்துடும். இந்த மாதிரி நேரத்துல ரோட்டோரம் டெண்ட் போட்டு வேல செய்யிறதுக்கு ஆளுங்க வேண்டியிருக்கும்னு தான நாம இன்னும் வறுமை ஒழிப்புன்னு நேரத்த வீணடிக்காம 60 வருசமா முன்னேறிக்கிட்டிருக்கிறோம். கொஞ்ச பணத்துல அரையோ குறையோ வேல ஒரு பக்கம் ஆரம்பிக்கும். மீதிப் பணம் காண்ட்ராக்ட் எடுத்தக் கையோட லாபமா பறந்து போயிரும். முக்கியமானது என்னன்னா? கடன் கொடுத்தவங்களுக்கும் உலகளாவிய டெண்டரில் காண்ட்ராக்ட் எடுத்த மேல்நாட்டு கம்பெனிங்களுக்கும் என்ன உறவுன்னு  தெரிஞ்சிக்கிறது. அதுக்கும் நிறைய வழி இருக்கு. நமக்கு வேற பல முக்கியமான வேலைங்க இருக்கிறப்போ இதுக்கேல்லாம் ஏது நேரம்.

 

ஏந்தான் இப்படியெல்லாம் நடக்குதோன்னு வருத்தப்படுறவங்களுக்கு ஒரு ஆறுதல் செய்தி. ஜவகர் திட்டம் தெளிவா சொல்லுது. “மக்களுக்காக அவர்களின் பங்களிப்போடுதான் திட்டம் செயல் படுத்தப்பட வேண்டும். திட்டத்தை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.” இதிலயும் ஒரே ஒரு சந்தேகம். உங்களுக்கும் தெரியாது. பெரும்பான்மையா இருந்து ஓட்டுப் போட்டுதலங்கள தேர்ந்தெடுக்கிற சாதரண மக்களுக்கும் தெரியாது. யாரும் சொல்லவும் இல்ல கேக்கவும் இல்ல. அப்ப நாம மக்கள் இல்லயா? ஆனா திட்டம் மட்டும் போயிக்கிட்டே இருக்குது. அதுவும் எப்படி? குளோபல் டெண்டர் அடுத்தடுத்து தயாராகுது. இப்போதைக்கு கவுன்சிலருங்க சிலரே வருத்தப்பட்டத நினைச்சி ஆறுதல் அடைஞ்சிக்கலாம். அவங்க சொன்னது – “இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை மாநகராட்சியானது இன்றுவரை ரகசியமாகவே செயல்பட்டு வருகிறது. அவர்களின் இந்தப் போக்குதான் நகரத்தை சீரழிவுக்கு கொண்டு செல்லப் போகிறது

 

நாம ஒண்ணும் தனியில்லன்னு வேணா சமாதானப்பட்டுக்கலாம். இந்தியா முழுக்க 63 நகரங்கள், ஏறக்குறைய நம் நாட்டின் மக்கள் தொகையில் பாதி, நம்மல மாதிரியேதான் கடனக் கட்டுறதுக்கே வாழப்போவுது. வாழுறப்பவும் தண்ணி முதலாளி, சாக்கட முதலாளி, குப்ப முதலாளி, ரோடு முதலாளி, பாலத்து முதலாளி இத மாதிரி பல மாதிரியான முதலாளிங்களுக்கு கையக் கட்டி காசக் கொடுக்கப் போவுது. ஒழுங்காக் கட்டுறமான்னு நம்மதலங்களும் சேந்து கண்காணிச்சி தொழில் வளக்கப் போறாங்க. நாம ஒழுங்கா டிக்கட் கட்டுறத பாத்தப்புறமா இன்னும் நெறய வெளிநாட்டுக் கம்பெனிங்க நம்மூருல கம்பெனி ஆரம்பிச்சி இன்னும் இன்னுமா லாபத்தப் பெருக்கப் போறாங்க. உழைக்கப் போறது நாமதான். ஆனா லாபம் மட்டும் போக வேண்டிய இடத்துக்கு போய் சேந்துரும்.

 

சரி அது போவுது, திட்டத்துக்கு வருவோம். கடன் எங்கிருந்து வந்ததோ அந்த நாட்டுக்கே அந்தப் பணம் திரும்பப் போகப்போவுது. (நமக்கு இது கொஞ்சம் தெரிஞ்ச கத மாதிரியே இருக்குதில்லகொடுத்ததும் நானே, கொடுக்கப்படுவதும் நானே, எடுப்பதும் நானே“).  அப்புறம் என்ன. அப்புறம் தான் கத உள்ளூருக்கு வருது. ஏற்கனவே பறந்து போன பணத்துக்கான வட்டியையும் முதலையும் நாமதான் கட்டப்போறோம். ஒரு 30 வருசத்துல கட்டி முடிச்சிறலாமுன்னு நம்புவோம். நம்மால முடியாட்டி அடுத்த தலைமுறை கட்டிறாதா என்ன? வாங்கின கடன கட்டாத பரம்பரன்னு நம்ம மேல ஒரு பழி வந்திரக்கூடாது பாருங்க

பரம்பரைக்கும் கட்டுறக் காசு எங்க போவுதுன்னே தெரியாமலேயே கடன் கட்டப்போற உங்க எல்லோரையும்   கும்பிட்டுக்கிறோமுங்க.